ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு

Grounding / தீய ஆற்றல்களை அழித்தல்


Grounding எனப்படுவது நம் உடலுக்குள் இறங்கி கொண்டிருக்கும் ஆற்றல்களை நிறுத்துவது அல்லது நாம் சிகிச்சை அளிக்கும் நபரின் உடலில் இருந்த தீய ஆற்றல்களை அழிப்பது.

ஒரு நோயாளிக்கோ, பிரச்சினைகள் உள்ளவர்களுக்கோ, சிகிச்சை அளிக்கும் போது அவரின் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அந்த தீய ஆற்றல்களை அழிக்காமல் அப்படியே விட்டு விட்டால், சிகிச்சை நடந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். அல்லது, அந்த தீய ஆற்றல்கள் மற்றவர்களின் உடலில் சேரக்கூடும். அதனால் சிகிச்சை அளிக்கும் நபர் அந்த தீய ஆற்றல்களை அழித்து விட வேண்டும்.

அடுத்ததாக ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கும் போது, நம் உடலில் இறங்கும் பிரபஞ்ச ஆற்றல் சில வேளைகளில் கட்டுப்படாமல் தொடர்ந்து நம் உடலுக்குள் இறங்கி கொண்டே இருக்கக் கூடும். அதனால் சிகிச்சை அளிக்கும் நபர்கள் சிகிச்சை முடிந்ததும் பிரபஞ்ச ஆற்றலை துண்டித்துக் கொள்ள வேண்டும். ஆற்றல் தொடர்ச்சியாக உடலுக்குள் கிரகித்தால் உடலின் ஆற்றல் அதிகரித்து உடலில் சில உபாதைகள் தோன்றலாம், தூக்கம் இன்மை உருவாகலாம். இவை இரண்டையும் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

இயற்கையுடன் ஆற்றலை துண்டிக்க
ஒரு நபருக்கு சிகிச்சை அளித்து முடித்தவுடன் ஆற்றலுடனான தொடர்பை துண்டிக்க, ஆற்றலுக்கும் அதன் உதவிக்கும் நன்றி கூறி, மனதாலே, "சிகிச்சை முடிந்தது, ஆற்றலின் தொடர்பு துண்டிக்கட்டும்", என்று நினைத்தாலே போதும், ஆற்றலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

அல்லது, இரண்டு கைகளையும் தேய்த்து எண்ணத்தால் நினைத்தாலும் ஆற்றல் துண்டிக்கப்பட்டுவிடும். அல்லது, நீங்களாக ஒரு புதிய யுக்தியையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

கல் உப்பை பயன்படுத்தி தீய ஆற்றல்களை அழித்தல்
ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு அல்லது மலை உப்பை வைத்துக் கொள்ளவும். அல்லது, ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு அல்லது மலை உப்பு கலந்த தண்ணீரை வைத்துக் கொள்ளவும். கைகளால் நோயாளியின் உடலை (scan) ஸ்கேன் செய்தால் தீய ஆற்றல் தேங்கி இருக்கும் பகுதியை அடையும் போது அந்த தீய ஆற்றலை நம்மால் உணர முடியும். அந்த தீய ஆற்றலை நம் எண்ணத்தால் பிடிக்க வேண்டும். கைகளால் பிடிப்பதை போன்று பிடிக்க வேண்டும். பிடித்த தீய ஆற்றலை உப்பில் அல்லது உப்பு கலந்த நீரில் போட வேண்டும்.

ஒவ்வொரு முறை சிகிச்சை அளித்த பிறகும் கைகளை உப்பிலோ உப்பு கலந்த தண்ணீரிலோ கழுவுவது நல்லது. இதன் மூலம் தீய ஆற்றல்கள் நம் மீது அண்டாமல் தடுக்க முடியும்.

தீய ஆற்றல்களைப் புதைத்தல்
நோயாளியின் தீய ஆற்றல்களை கைகளால் மேலே குறிப்பிட்டபடி பிடித்து எண்ணத்தால் ஒரு குழி தோண்டி அதை அந்த குழியில் போட வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு அந்த குழியை எண்ணத்தால் மூடிவிட வேண்டும்.

சிகிச்சை அளிப்பவரின் உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் உடலிலிருந்து வெளியேறட்டும் என்ற எண்ணத்துடன் கால்களில் செருப்பில்லாமல் தரையிலும் நிற்கலாம்.

ஆற்றல்களை தண்ணீரில் வீச
சிகிச்சை பெறுபவரின் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை பிடித்து ஓடும் தண்ணீரில் கழுவலாம். ஆற்று நீரில் அல்லது ஓடும் குழாய் தண்ணீரில் கைகளை கழுவலாம். கைகளை கழுவும் போது தீய ஆற்றல்களை கழுவுகிறேன் என்ற நோக்கம் இருக்க வேண்டும். நீர் வீழ்ச்சி, ஆறு அல்லது கடலில் தீய ஆற்றல்களை வீசலாம்.

« PREV
NEXT »