ஹோலிஸ்டிக் ரெய்கி


ரெய்கி என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பேராற்றலாகும். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் போது இந்த உலகில் நமக்கு தேவையான அத்தனை விசயங்களையும் அடைய முடியும்.

ரெய்கி ஆற்றலை புரிந்துகொள்ள மின்சாரத்தை எடுத்துக்காட்டாக பயன்படுத்தலாம். மின்சாரம் என்பது ஒரு பொதுவான ஆற்றல், வீட்டின் கம்பிகளின் மூலமாக உள்ளே நுழையும் மின்சாரம் எந்தப் பொருளில் சேருகிறதோ அந்த பொருளுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. ஒலியாகவும், ஒளியாகவும், காற்றாகவும், அசைவாகவும், சேரும் இடத்திற்கேற்ப மின்சாரம் பரிமாணத்தைக் கொள்கிறது. வீட்டில் எத்தனை மின்சாதன பொருட்கள் இயங்கினாலும் அத்தனை பொருட்களையும் இயக்கும் அடிப்படை ஆற்றலாக இருப்பது மின்சாரம் தான்.

எத்தனை நவீனமான விலையுயர்ந்த மின்சாதன பொருளாக இருந்தாலும் மின்சாரம் இல்லாவிட்டால் அது இயங்காது. அவற்றைப் போன்று ரெய்கி எங்கு சேருகிறதோ அந்த நபருக்கு, விலங்குக்கு, தாவரத்துக்கு , பொருளுக்கு, இடத்திற்கு, ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையது. சில ரெய்கி மாஸ்டர்கள் ரெய்கியை உடலின் உபாதைகளையும், நோய்களையும், குணப்படுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ரெய்கியை மனித வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தலாம்.

இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, நம்பிக்கைக்கோ, மொழிக்கோ, நாட்டிற்கோ, உரிமையானது இல்லையோ; அதைப் போலவே ரெய்கியும் எந்த ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, நம்பிக்கைக்கோ, மொழிக்கோ, நாட்டிற்கோ, உரிமை இல்லாதது. ரெய்கி ஒரு சுதந்திரமான பேராற்றல். அதற்கு எந்த எல்லைகளும், எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

உண்மையில் ரெய்கி ஆதிகாலம் தொட்டு மனிதர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆற்றலின் பெயர் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகிறதே ஒழிய அந்த பெயர்கள் உணர்த்தும் அடிப்படை ஆற்றல் ஒன்றுதான். சரித்திர காலம் முதலாக ஆச்சரியமான பல கதைகளையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும், நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அவர் தொட்டால் நோய்கள் குணமாகுமாம், ஊமைகள் பேசுவார்களாம். அவரை சந்தித்தால் துன்பங்கள் தீருமாம். இவரை சந்தித்தால் பிரச்சனைகள் தீரும். அந்த இடத்திற்கு சென்றால் தீய சக்திகள் ஓடிவிடும். இவ்வாறு பல காலமாக பலரைப் பற்றிய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். பரவலாக இவ்வாறான அதிசய ஆற்றல்களைக் கொண்ட மனிதர்கள் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

ஒரு தனி நபர் பலரின் நோய்களை தீர்ப்பதற்கும், துன்பங்களை நீக்குவதற்கும், பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும், காரணம் பிரபஞ்ச ஆற்றல்தான். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்த தெரிந்த மனிதர் எல்லா மனிதர்களுக்கும் பயன்தரும் வகையில் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழலாம். இந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தும் போது இயலாது, முடியாது, என்று எதுவுமே இருக்காது.

0 Comments