இணையதள அறிமுகம்

 
இந்த இணையதளத்தை உருவாக்க மேலும் அதில் கட்டுரைகளை எழுத, எனக்கு வழிகாட்டியாக இருந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கே புகழ்கள் அனைத்தும். ரெய்கி எனும் அற்புத கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டு இந்த இணையதளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும். 

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, நான் ரெய்கியை பயிற்சி செய்து வருகிறேன். ரெய்கி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்புரிகிறது? அதன் தன்மைகள் என்ன? அதன் நன்மைகள் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? என்பன போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளேன். அவற்றின் மூலமாக பெற்ற அனுபவங்களை, இந்த இணையதளத்தின் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 

நாம் அறிந்துக்கொள்ள போவது ஏதோ ஒரு அதிசயமான, ஆச்சரியமான, நமக்குத் தொடர்பில்லாத ஒரு ஆற்றலை பற்றி அல்ல. இந்த இணையதளத்தின் மூலமாக நம்மைப் பற்றியும், நம் சுயத்தைப் பற்றியும், நம் வாழ்க்கையின் இயக்கத்தைப் பற்றியும் தான் அறிந்துகொள்ளப் போகிறோம்.

ரெய்கி என்பது பத்தோடு பதினொன்றாக கற்றுக் கொள்ளக்கூடிய சாதாரணமான கலையல்ல. அதே நேரத்தில் இந்த கலையை பணம் செய்யும் மந்திர வித்தையென சிலர் எண்ணுகிறார்கள், அதுவும் தவறு. ரெய்கியை பயன்படுத்தி குறுக்கு வழியில் அதை அடையலாம், இதை அடையலாம் என்று கூறுவதெல்லாம் வியாபார நோக்கங்களுக்காக செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள் மட்டுமே. இது ஒரு வாழ்வியல் கலை, மனித வாழ்க்கையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் புரிதலோடும் வாழ்வதற்கு உதவும் கலை.

இந்தக் கலையை முழுமையாக அறிந்து, புரிந்து, உணர்ந்து, முறையாக பயிற்சி செய்யும்போது, உங்களுக்குள் பல மாறுதல்கள் உண்டாவதை நீங்களே உணரலாம். உங்கள் வாழ்க்கை மாறும், சிந்தனை மாறும், வாழ்க்கையின் நிலையும் தரமும் மாறும். நீங்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம், உங்களைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.

எனது கட்டுரைகளை ஒருமுறைக்குப் பலமுறை மீண்டும் மீண்டும் வாசியுங்கள். அவற்றின் உள்ளடக்கங்களையும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். ஏதாவது சந்தேகங்கள் அல்லது கேள்விகள் தோன்றினால் கட்டுரைக்குக் கீழே உங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

0 Comments