ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
ஆரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆராக்களின் உதாரணம் (ஆரோக்கியமான ஆராக்களின் உதாரணம்) 

(ஆரோக்கியமற்ற ஆராக்களின் உதாரணம்) 

Aura - ஆரா

ஆரா (Aura) என்பது மனித உடலை சூழ்ந்திருக்கும் ஒளியாகும். இதை ஒளி உடல் என்றும் அழைப்பார்கள். ஆரா அதிர்வுகள் (vibration) மற்றும் அலைகளுடன் (waves) இணைந்து செயல்படுகிறது. இவை உடலின் தோலின் மேற்பரப்பில், ஒரு போர்வையைப் போன்று அமைந்துள்ளன. இவற்றை பூத கண்களால் சாதாரணமாக காண முடியாது. ஆனால் அனைவராலும் இவற்றை உணர முடியும்.

இவை மனிதர்களின் மன நிலைக்கும், சிந்தனைக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப தனது நிறத்தையும், அதிர்வுகளையும் மாற்றிக் கொண்டே இருக்கின்றன. சக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் தொடர்பு பாலமாகவும் இவை செயல்படுகின்றன. இவை ஒரு வகையில் மனிதர்களுக்கு சக்தி கவசமாகவும், பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகின்றன.


(மனிதர்களின் ஆரா மாதிரிகள்) 

எல்லா மனிதர்களாலும், விலங்குகளாலும் மற்றும் தாவரங்களாலும் ஆராவையும் அதன் அதிர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். சில மனிதர்களை பார்த்ததும் அவர்கள் மீது நமக்கு மரியாதை உருவாவதற்கும், சிலர் மீது அன்பு உருவாவதற்கும், சிலர் மீது கோபம் உருவாவதற்கும், சிலர் மீது வெறுப்பு உருவாவதற்கும், சிலர் மீது அச்சம் உருவாவதற்கும் அவர்களின் ஆராவும், அலைகளும், அதிர்வுகளுமே காரணமாக இருக்கின்றன. அந்த நபர்களின் உண்மையான குணாதிசயங்கள் நமக்கு தெரியாமல் இருந்தாலும், அவர்களின் ஆராவும், அலைகளும், அதிர்வுகளும் அவர்களின் உண்மையான குணத்தைக் காட்டி கொடுத்துவிடுகின்றன.

நாய்கள் ஒரு சிலரைப் பார்த்ததும் அமைதியாக இருப்பதற்கும், ஒரு சிலரை மட்டும் எந்த நாய் எங்கு கண்டாலும் குரைப்பதற்கும், அவர்களின் ஆரா தான் காரணம். ஒரு சிலரை கண்டால் பூனைகள் அருகில் வந்து உரசுவதற்கும், சிலரிடம் மட்டும் விலங்குகளும், பறவைகளும், மீன்களும், சகஜமாக பழகுவதற்கும், ஒரு சிலரைக் கண்டால் அவை பயந்து ஓடுவதற்கும் அவர்களின் ஆராதான் காரணம்.

மனிதர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் ஏற்ப ஆரா மாறுதல் அடைவதனால் சக மனிதர்களும், விலங்குகளும் ஆராவின் மூலம் அவர்களின் எண்ணங்களையும் நோக்கங்களையும் புரிந்து கொள்கிறார்கள்.

எண்ணங்களினால் ஏற்படும் மாற்றங்கள் வெகுகாலம் நீடிக்கும் போது அது ஆராவை பாதித்து அதில் பாதிப்புகள் உண்டாகவும், ஓட்டைகள் விழவும், கெட்ட ஆராக்கள் அண்டவும் வழிவகுக்கிறது. அதனால் ஆரா பாதிப்படைந்த பகுதியில் மனதளவிலும், உடலளவிலும், சக்தி நிலையிலும் குறைபாடுகளும், தொந்தரவுகளும், நோய்களும் உருவாக வாய்ப்பிருக்கிறது.

நம் எண்ணங்களாலும், வாழ்க்கை முறைகளினாலும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் வெளி நபர்களாலும் கூட ஆராவில் பாதிப்புகள் உண்டாகலாம். உணவையும், உறவுகளையும், நட்புகளையும், உணர்வுகளையும், சிந்தனையையும் பாதுகாப்பதும் ஒழுங்குப்படுத்துவதும் நம் ஆராவை பாதுகாக்கும் வழியாகும்.

சில பயிற்சிகளின் மூலமாக ஆராவை பூத கண்களால் பார்க்கலாம். கிர்லியன் கேமராவின் மூலமாகவும் ஆராவை படம் பிடிக்கலாம்.


(கிர்லியன் கேமராவைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட ஆரா) 

ஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்

மனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழகும் போதும், தவறான இடங்களுக்கு செல்லும் போதும், மனிதர்களின் ஆராவில் துளைகள் விழலாம். உடலின் ஆற்றல்களும் குறையலாம். உடலின் ஆற்றல் குறைவாக இருப்பதினால் அந்த துளைகளின் வழியாக தீய ஆற்றல்களும், தீய எண்ணங்களும், துர் ஆன்மாக்களும் அந்த மனிதனின் உடலுக்குள் நுழைய கூடும். இதன் காரணமாக பல துன்பங்களும், வேதனைகளும், நோய்களும் சம்பந்தப்பட்டவருக்கு அண்டக்கூடும்.

மனிதர்களின் ஒவ்வொரு தவறான பழக்கமும், தவறான வாழ்க்கை முறையும் அவர்களின் ஆராவையும், ஆற்றலையும் சீரழிக்க கூடும். அதைப்போன்றே மனிதர்கள் கடைபிடிக்கும் ஒவ்வொரு நல்ல பழக்க வழக்கமும் அவர்களின் ஆராவை சீர்படுத்தும்.

ஆரோக்கியமற்ற ஆராவையும் குறைந்து போன ஆற்றலையும் சில பழக்க வழக்கங்களை சரி செய்வதன் மூலமாக குணப்படுத்தலாம். 

1. உடலுக்கு ஒத்துப்போகும், எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்பது.
2. அதிகமான பழங்களை உட்கொள்வது.
3. தூய்மையான நீரை பருகுவது.
4. போதிய அளவு ஓய்வெடுப்பது.
5. மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருப்பது.
6. நல்ல மனிதர்களுடன் பழகுவது.
7. புனிதமான இடங்களுக்கு செல்வது.
8. தூய்மையான ஆடைகளை அணிவது.
9. வாசனை திரவியங்களை பயன்படுத்துவது.
10. பூ, பன்னீரில் குளிப்பது.
11. கல்லுப்பு அல்லது மலை உப்பில் குளிப்பது.

இவை இழந்த ஆற்றல்களை திரும்பப் பெறும், அல்லது இருக்கும் ஆற்றல்களை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள். 

ஆராவையும் ஆற்றலையும் சீரழிக்க கூடிய விசயங்கள்


1. உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகள் மற்றும் பானங்கள்.
2. அதிகப்படியான அசதி, சோர்வு, தூக்கமின்மை.
3. வாழ்க்கையில் விரக்தி அல்லது மன அழுத்தம்.
4. பயம், கவலை, சோகம், திமிர், கர்வம் போன்ற உணர்வுகள்.
5. உடலின் ஆரோக்கியக் குறைபாடுகள்.
6. தவறான புத்தகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்.
7. தவறான மனிதர்களின் உறவுகள்.
8. தூய்மையற்ற இடங்கள்.
9. தவறான பழக்க வழக்கங்கள்.