ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
ஆற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Grounding / தீய ஆற்றல்களை அழித்தல்


Grounding எனப்படுவது நம் உடலுக்குள் இறங்கி கொண்டிருக்கும் ஆற்றல்களை நிறுத்துவது அல்லது நாம் சிகிச்சை அளிக்கும் நபரின் உடலில் இருந்த தீய ஆற்றல்களை அழிப்பது.

ஒரு நோயாளிக்கோ, பிரச்சினைகள் உள்ளவர்களுக்கோ, சிகிச்சை அளிக்கும் போது அவரின் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அந்த தீய ஆற்றல்களை அழிக்காமல் அப்படியே விட்டு விட்டால், சிகிச்சை நடந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். அல்லது, அந்த தீய ஆற்றல்கள் மற்றவர்களின் உடலில் சேரக்கூடும். அதனால் சிகிச்சை அளிக்கும் நபர் அந்த தீய ஆற்றல்களை அழித்து விட வேண்டும்.

அடுத்ததாக ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கும் போது, நம் உடலில் இறங்கும் பிரபஞ்ச ஆற்றல் சில வேளைகளில் கட்டுப்படாமல் தொடர்ந்து நம் உடலுக்குள் இறங்கி கொண்டே இருக்கக் கூடும். அதனால் சிகிச்சை அளிக்கும் நபர்கள் சிகிச்சை முடிந்ததும் பிரபஞ்ச ஆற்றலை துண்டித்துக் கொள்ள வேண்டும். ஆற்றல் தொடர்ச்சியாக உடலுக்குள் கிரகித்தால் உடலின் ஆற்றல் அதிகரித்து உடலில் சில உபாதைகள் தோன்றலாம், தூக்கம் இன்மை உருவாகலாம். இவை இரண்டையும் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

இயற்கையுடன் ஆற்றலை துண்டிக்க
ஒரு நபருக்கு சிகிச்சை அளித்து முடித்தவுடன் ஆற்றலுடனான தொடர்பை துண்டிக்க, ஆற்றலுக்கும் அதன் உதவிக்கும் நன்றி கூறி, மனதாலே, "சிகிச்சை முடிந்தது, ஆற்றலின் தொடர்பு துண்டிக்கட்டும்", என்று நினைத்தாலே போதும், ஆற்றலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

அல்லது, இரண்டு கைகளையும் தேய்த்து எண்ணத்தால் நினைத்தாலும் ஆற்றல் துண்டிக்கப்பட்டுவிடும். அல்லது, நீங்களாக ஒரு புதிய யுக்தியையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

கல் உப்பை பயன்படுத்தி தீய ஆற்றல்களை அழித்தல்
ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு அல்லது மலை உப்பை வைத்துக் கொள்ளவும். அல்லது, ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு அல்லது மலை உப்பு கலந்த தண்ணீரை வைத்துக் கொள்ளவும். கைகளால் நோயாளியின் உடலை (scan) ஸ்கேன் செய்தால் தீய ஆற்றல் தேங்கி இருக்கும் பகுதியை அடையும் போது அந்த தீய ஆற்றலை நம்மால் உணர முடியும். அந்த தீய ஆற்றலை நம் எண்ணத்தால் பிடிக்க வேண்டும். கைகளால் பிடிப்பதை போன்று பிடிக்க வேண்டும். பிடித்த தீய ஆற்றலை உப்பில் அல்லது உப்பு கலந்த நீரில் போட வேண்டும்.

ஒவ்வொரு முறை சிகிச்சை அளித்த பிறகும் கைகளை உப்பிலோ உப்பு கலந்த தண்ணீரிலோ கழுவுவது நல்லது. இதன் மூலம் தீய ஆற்றல்கள் நம் மீது அண்டாமல் தடுக்க முடியும்.

தீய ஆற்றல்களைப் புதைத்தல்
நோயாளியின் தீய ஆற்றல்களை கைகளால் மேலே குறிப்பிட்டபடி பிடித்து எண்ணத்தால் ஒரு குழி தோண்டி அதை அந்த குழியில் போட வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு அந்த குழியை எண்ணத்தால் மூடிவிட வேண்டும்.

சிகிச்சை அளிப்பவரின் உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் உடலிலிருந்து வெளியேறட்டும் என்ற எண்ணத்துடன் கால்களில் செருப்பில்லாமல் தரையிலும் நிற்கலாம்.

ஆற்றல்களை தண்ணீரில் வீச
சிகிச்சை பெறுபவரின் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை பிடித்து ஓடும் தண்ணீரில் கழுவலாம். ஆற்று நீரில் அல்லது ஓடும் குழாய் தண்ணீரில் கைகளை கழுவலாம். கைகளை கழுவும் போது தீய ஆற்றல்களை கழுவுகிறேன் என்ற நோக்கம் இருக்க வேண்டும். நீர் வீழ்ச்சி, ஆறு அல்லது கடலில் தீய ஆற்றல்களை வீசலாம்.

ஆற்றல் (Energy)


ஆற்றல் (Energy) ஒவ்வொரு மனிதனுக்கும், விலங்குக்கும், தாவரத்திற்கும் மிகவும் அவசியமானது. ஆற்றல் உயிர்களை வாழ வைக்கிறது. ஆற்றல் குறைபாடே உயிர்களைக் கொல்கிறது. மனிதர்களுக்கு உணவு, தண்ணீர், இயற்கை, மழை, பயிற்சிகள், தியானம், பிரார்த்தனை, வழிபாடு போன்றவற்றால் ஆற்றல் கிடைக்கிறது.

உணவு பழக்கங்கள் 
உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளையும், எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளையும் உட்கொள்ளும் போது உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம். உடலுக்கு ஏற்ற உணவு எனும் போது அது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடலாம். ஒரு தாய்க்கும், சேய்க்கும் கூட உணவின் தேவைகள் மாறுபடலாம். பழங்களும், காய்கறிகளும் மட்டுமே அனைத்து மனிதர்களுக்கும் ஒத்துக்கொள்ளக் கூடிய உணவாகும். அவற்றில் மட்டுமே மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

வழிபாடுகள் மற்றும் பயிற்சிகள் 
தொழுகை, வழிபாடு, பிரார்த்தனை, தியானம், யோகா, தைச்சி, மூச்சு பயிற்சி, மற்றும் மற்ற ஆன்மீக பயிற்சிகளின் மூலமாக மனித உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம், மேலும் தக்க வைக்கலாம். இவ்வாறான பயிற்சிகள் உடலின் ஆற்றல் சீர்கெடாமல் தடுப்பதோடு, சீராக செயல்படவும் உதவும்.

இயற்கையோடு இணைதல்
காடு, மலை, கடல், ஆறு, அருவி, குளம், புல்வெளி, போன்ற இடங்களில் கால்களில் செருப்பின்றி நடக்கும் போதும், அமைதியாக அமர்ந்திருக்கும் போதும், குளிக்கும் போதும் பிரபஞ்ச ஆற்றல் உடலில் அதிகரிக்கும். சீர்கெட்ட ஆற்றல் சரி செய்யப்படும். மேலும் ஆற்றலும், இயற்கையின் தொடர்பும் மேம்பாடு அடையும்.

நேர்மறை ஆற்றல்களைப் பெற


ஒரு மனிதர் நேர்மறை ஆற்றல்களை உணவின் மூலமாகவும், வாழ்க்கை முறைகளின் மூலமாகவும், ஆன்மீகப் பயிற்சிகளின் மூலமாகவும், மற்றும் இயற்கையிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆற்றல் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது என்று முன்னரே பார்த்தோம். அந்த ஆற்றல்களை நாம் சேகரித்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

உணவின் மூலமாக ஆற்றல்களை பெற எளிதாக உடலால் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டால், உடல் சுயமாகவே நல்ல ஆற்றல்களை உற்பத்தி செய்துக் கொள்ளும். மேலும் நாம் உட்கொள்ளும் உணவானது மனதுக்கும், கண்களுக்கும், நாவுக்கும் விருப்பமானதாக இருக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதன் மூலமாகப் பிரபஞ்ச ஆற்றலை அதிகமாக உடலில் சேகரிக்கலாம். காய்கறிகளின் ஆற்றல் அவற்றை சமைக்கும் போது குறைந்து போகலாம் அல்லது சிதைந்து போகலாம். ஆனால் பழங்களில் இருக்கும் ஆற்றல்கள் மட்டும் மனிதர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். காரணம் பழங்களைச் சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். பழங்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலமாக உடலில் அதிகப்படியான ஆற்றல்களை சேகரிப்பது மட்டுமின்றி நோய்களையும் குணப்படுத்தலாம்.

இயற்கையிலிருந்து ஆற்றல்களைப் பெற இயற்கையான தூய காற்றை சுவாசிக்கும் போது அவற்றில் கலந்திருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களை உடல் கிரகித்துக் கொள்ளும். காடு, மலை, குகை, புல்வெளி, போன்ற இடங்களுக்குச் சென்று வெறும் காலில் செருப்பில்லாமல் நடக்கும்போது உடல் அந்த நிலத்தில் இருந்தும், காற்றில் இருந்தும், வெளியில் இருந்தும் பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகித்துக் கொள்ளும். கடல், ஆறு, குளம், குட்டை, போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளிக்கும் போது உடல் அவற்றில் இருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகித்துக் கொள்ளும். பஞ்சபூதங்களில் காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, நிலம் போன்றவற்றில் உருவாகும் ஆற்றல்களையும் சுயமாகக் கிரகித்துக் கொள்ளும் தன்மை நம் உடலுக்கு உள்ளது.

பயிற்சிகளின் மூலமாக ஆற்றல்களை பெற மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம், தைச்சி, நோன்பு, வழிபாடுகள், தொழுகை, வணக்கங்கள் போன்றவற்றின் மூலமாகவும் உடல் பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகித்தும், அவற்றை சீர் செய்தும் கொள்கிறது.

ரெய்கி ஆற்றலை அனுப்பும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றலை ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்துக்கோ, இடத்துக்கோ எளிதாக அனுப்பலாம். மன அமைதியுடனும், மன ஓர்மையுடனும், உங்கள் கரங்களை அந்த மனிதர், விலங்கு, பொருள் அல்லது இடத்தின் மீது காட்டி மனதுக்குள் ரெய்கி ஆற்றல் அவர் மீது பரவட்டும் என்று நினைத்தாலே போதும். நீங்கள் நினைத்த மாத்திரமே ரெய்கி ஆற்றல் உங்கள் உள்ளங்கைகளின் மூலமாக பரவ தொடங்கிவிடும். அதை நீங்கள் உணரவும் முடியும்.

ஒரு குறிப்பிட்ட நோயோ, தொந்தரவோ, நோக்கமோ, தேவையோ இருந்தால், அந்த நோக்கத்தை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும், ரெய்கி ஆற்றலை அனுப்பலாம். உங்கள் உள்ளங்கைகளைக் காட்டி கொண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். அவ்வளவு எளிமையானது ரெய்கி. இரண்டு கரங்களையும் பயன்படுத்தலாம் அல்லது வலது கரத்தை மட்டுமே பயன்படுத்தலாம்.  ரெய்கி முத்திரைகளையும் (Reiki symbols) பயன்படுத்தலாம்.

1. அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி ரெய்கி ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.

2. நம் வீட்டை சுற்றி இருக்கும் செடி, கொடி, மற்றும் மரங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

3. நோய்வாய்ப்பட்டிருக்கும் வீட்டு அல்லது சாலையோர விலங்குகளுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

4. கர்ப்பம் தரித்திருக்கும் விலங்குகளுடன் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

5. விபத்துகளில் பாதிப்படைந்த அல்லது ஊனமுற்ற விலங்குகளுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

6. ஆபத்தில், அவசரத்தில், அல்லது ஆம்புலன்சில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

7. முதுமையுற்ற, ஏழ்மையில் இருக்கும் அல்லது இயலாமையில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றல்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8. கர்ப்பம் தரித்த தாய்மார்களுடன் ரெய்கி ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

9. வீட்டுக்காக நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற உணவு பண்டங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்புங்கள்.

காய்கறிகளோ, பழங்களோ, தானியங்களோ வாங்கினால், வீடு திரும்பியதும் அவற்றின் மீது ரெய்கி ஆற்றலை அனுப்பினால் அவை அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும். இதை முயற்சி செய்துபாருங்கள்.

 (கைகளில் ஆற்றல் பந்தை உருவாக்கும் உதாரணம்) 

(கைகளில் ஆற்றலை உணர்தல் உதாரணங்கள்) 

ஆற்றலின் வீரியத்தை அதிகரிக்கும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றல் பயிற்சிகள் 
உடலில் ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சில பயிற்சிகள்.

1. ஆற்றலை அடிக்கடி கைகளில் குவித்து, ஆற்றல் பந்தை (Energy Ball) உருவாக்க வேண்டும்.

2. உள்ளங்கையில் உருவாகும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.

3. உடலில் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக உணரவும், கவனிக்கவும் வேண்டும்.

4. இயற்கையிலும் நம்மை சுற்றியும் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றல்களை எப்போதும் கூர்மையாக உணரவும், கவனிக்கவும் வேண்டும்.

5. எப்போதுமே இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டும்.


ஆற்றலை பயன்படுத்தும் காலம்

ஒரு மாணவர் தீட்சை பெற்றுவிட்டால் அவர் பெற்ற தீட்சையும் ஆற்றலும் கடைசி வரையில் அவருடன் இருக்கும். தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தாலோ, பயிற்சிகள் செய்யாமல் இருந்தாலோ ஆற்றல் சற்று குறையலாம் அல்லது அதன் பலன்கள் தாமதமாகலாம். மற்றபடி ஒருமுறை முழுமையாகவும், முறையாகவும் தீட்சை பெற்றுவிட்டால் இறுதிவரையில் அது நம்முடன் இருக்கும்.

தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தாலோ, பயிற்சிகள் செய்யாமல் இருந்தாலோ பெட்ரோல் தீர்ந்து போன வாகனத்தைப் போல் உடலும், மனமும், ஆராவும், சக்ராக்களும் ஆற்றலை இழக்கலாம். மீண்டும் பயிற்சிகளை தொடங்கும் போது அனைத்தும் மீண்டும் முறையாக செயல்படத் தொடங்கும். ஒருவேளை ஒரு மாணவர் முறையாக அல்லது முழுமையாக தீட்சை பெறவில்லை என்று கருதினால் வேறு ஒரு மாஸ்டரிடம் மீண்டும் தீட்சை பெற்றுக் கொள்வது சிறப்பாகும்.


ரெய்கியை தவறாக பயன்படுத்தாதீர்கள்

 சில மனிதர்கள் ரெய்கி ஆற்றலை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த முயற்சி செய்வார்கள். பெண்களை கவர்வது, மக்களை ஏமாற்றுவது, செய்வினை செய்வது, பழிவாங்குவது, மனிதர்களை மயக்குவது, பேய் பிசாசு போன்றவற்றுடன் உறவாடுவது, மற்றும் மற்ற தவறான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த ஆற்றலை பயன்படுத்த முயல்வார்கள்.

ஒருவர் இந்த ஆற்றலை தவறான காரியங்களுக்குப்  பயன்படுத்த முயற்சி செய்தால், அவரின் ரெய்கி ஆற்றல் குறைய தொடங்கிவிடும், பலகீனமாகும். ஒருவர் இந்த ஆற்றலை நன்மையான காரியங்களுக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்துவாரே ஆனால், அவரின் ஆற்றல் மேலும் வலிமையைப் பெரும். விரைவாகவும் சிறப்பாகவும் இலகுவாகவும் செயல்படும். இவர் நினைத்த மாத்திரமே இவர் நினைத்த விசயங்கள் நடக்க தொடங்கிவிடும். இது இயற்கையின் விதியாகும்.