ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
கர்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கர்ம கணக்கும் பிறப்பும்

இந்தியாவில் தோன்றிய சைவம், வைணவம், பௌத்தம், சமணம், சீக்கியம், மற்றும் ஹிந்து மதங்களுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக மனிதர்களின் ஆன்மாக்கள் மறுபிறப்பு எடுக்கும் என்பதை இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. மனிதர்களின் வாழ்க்கை ஒரு முறைதான் என்பதையும், மரணத்துக்கு பின்பு நேரடியாக சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் என்பதையும் இந்த மதங்கள் ஒப்புக்கொள்வதில்லை.

ஆன்மாக்கள் தங்களின் கர்ம கணக்குகள் முடியும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்துக்கொண்டே இருக்கும் என்பது மேலே குறிப்பிட்ட மதங்களின் நம்பிக்கையாகும். இந்த மதங்களை பின்பற்றும் பலர் பாவம் செய்தவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பெடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தவறான நம்பிக்கையாகும்.

ஆன்மாக்களை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க தூண்டுவது அவை செய்த கர்மாக்களாகும். கர்மா என்ற சொல்லுக்கு பாவம் என்று பொருளல்ல, மாறாக கர்மா என்றால் செயல்கள் என்றுதான் பொருளாகும். ஒருவர் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே பிறப்பெடுக்க காரணமாக இருக்கலாம். ஒரு ஆன்மாவின் உடல், மனம், புத்தி, குடும்பம், ஆரோக்கியம், செல்வம், உறவுகள், போன்றவை அந்த ஆன்மாவின் முந்தைய பிறப்பின் தொடர்ச்சியாகவும் அதன் பலனாகவும் அமைகின்றன.

இறந்த ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு காரணம் கர்ம கணக்கை நிவர்த்தி செய்வதற்காக. கர்ம பலனை அனுபவிப்பதற்காக பிறப்பு எடுப்பதால்தான் சிலர் ஏழைகளாகவும், சிலர் வசதி படைத்தவர்களாகவும், சிலர் ஆரோக்கியமாகவும், சிலர் நோயாளிகளாகவும், சிலர் ஊனமாகவும், இன்னும் பல வித்தியாசங்களில் பிறக்கிறார்கள்.

உழைக்காதவர்களும், எந்தத் திறமையும் இல்லாதவர்களும், எந்த முயற்சியும் செய்யாதவர்களும், மடையர்களும் வசதியாக வாழ்வதற்கும், சிலர் என்ன படித்தாலும், என்ன திறமை இருந்தாலும், என்னதான் முயற்சி செய்தாலும் வாழ்கையில் தோல்விகளும் துன்பங்களும் உண்டாவதற்கும், சிலர் பிறக்கும் போதே செல்வ செழிப்போடு பிறப்பதற்கும், சிலர் பிறக்கும் போதே பெற்றோர்களை இழப்பதற்கும், வறுமையில் வாடுவதற்கும் அவர்களின் கர்ம பலன்கள் தான் காரணம். அந்த குறிப்பிட்ட ஆன்மா முந்தைய பிறவிகளில் செய்தவற்றின் பலனாகத்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.

அடுத்த பிறவி சிறப்பாக அமைய வேண்டுமென்றாலோ, அல்லது அடுத்த பிறவி இந்த பூமியில் பிறக்கக் கூடாது என்றாலோ, இந்த வாழ்க்கையை விழிப்போடும், கவனத்துடனும் வாழவேண்டும். பற்றோடும் நான் என்ற அகந்தையோடும் மனிதர்கள் செய்யும் அத்தனை செயல்களும் மறுபிறப்புக்கு வழிவகுக்கும். சில நெல்மணிகளுக்கு ஆசைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்டு கிடைக்கும் பறவைகளை போல, ஆன்மாக்கள் உலக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு இந்த பூமியில் அடைபட்டு கிடக்கின்றன.


புத்தர் விளக்கும் கர்மா கோட்பாடுகள்

கர்மவினை என்பது என்ன?
கர்மா மற்றும் வினை இந்த இரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள்தான். மொழிகள் மட்டுமே மாறுபடுகின்றன. கர்மா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, கருமம், செயல் அல்லது வினை என்று பொருள்படும். மனிதர்கள் செய்யும் செயல்களைத் தான் கர்மா என்ற சொல் குறிக்கிறது. யார் எந்த செயலை செய்தாலும் அதற்கான விளைவு என்று ஒன்று இருக்கும். அனைவரும் அவர் அவர் செய்த செயலுக்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும். பலன் நன்மையானதா? தீமையானதா? என்பது செய்த செயலை பொறுத்தே அமைகிறது. செய்த செயல்களின் காரணமாக விளையும் விளைவுகளுக்கு "ரிபக்க" என்று பெயர்.

கர்மா என்பது உண்மையில் உண்டா இல்லையா?
மனிதர்களின் மனதில் பதிவாகும் அனைத்துமே கர்மாக்கள் தான். ஒருவர் சுய நினைவோடு செய்யும் அனைத்துமே கர்மாக்கள் தான். அவற்றிற்கு பிரதிபலன்கள் நிச்சயமாக உருவாகும். தன் சுய உணர்வு இல்லாமல் தவறுதலாக செய்த செயல்களுக்கு கர்மகணக்கு கிடையாது. மனப்பதிவுகள் உருவாகவில்லை என்றாலும் கர்மா கிடையாது. உதாரணத்துக்கு பற்றற்ற துறவிகள் பற்றில்லாமல் செய்யும் செயல்களுக்கு கர்மா கிடையாது. தவறுதலாக சிறு உயிர்களை மிதித்துவிட்டால் கர்மா கிடையாது.

பலருக்கு கர்மா என்று ஒன்று உள்ளதா? கர்மகணக்கு என்று ஏதாவது உள்ளதா? என்ற குழப்பமும் சந்தேகமும் இருக்கும். சிலர் கர்மா என்பது இந்து, புத்த, சமன மதங்கள் சம்பந்தபட்டது என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் கர்மா என்பது செய்யும் செயலும் அதன் விளைவுகளும் தான். மனிதர்கள் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு நிச்சயமாக உருவாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மனிதர்கள் செய்யும் செயல்களினால் உருவாகும் சூட்சமமான விளைவுகளை தான் கர்மகணக்கு என்றழைப்பார்கள்.

கர்மாவின் விளைவுகள்
கர்மாவின் விளைவுகள் இவ்வாறுதான் இருக்கும் என்பதை யாராலும் விளக்கிவிட முடியாது. இயற்கையின் கணக்குகளை யாரும் கணக்கிடவோ கணித்திடவோ இயலாது. கர்மத்தின் விளைவுகள் மட்டும் இன்று வரையில் யாருக்கும் தெரியாது. இது சரி, இது தவறு என்று மனிதர்கள் போடும் கணக்குகளுக்கும், இயற்கையின் கர்ம கணக்குகளுக்கும் சம்பந்தமே கிடையாது.

மந்திரத்தால் மாங்காய் காய்க்காது
அந்த யோகம் செய்யுங்கள், இந்த மந்திரம் சொல்லுங்கள், அந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள், இந்த இடத்துக்குச் செல்லுங்கள், அந்த கயிறு கட்டுங்கள், வீட்டில் அதை மாட்டுங்கள், கர்மா கழிந்துவிடும் என்று சொல்லுவதில் அணுவளவும் உண்மை இல்லை.

யாராக இருந்தாலும். செய்த செயலுக்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். யாருக்கும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.

கர்மாவை வெல்லும் ஒரே வழி
கருடன் பறக்க காற்றின் வேகம் தடையாக இருக்கும் போது, கருடன் மேகத்துக்கு மேலே சென்றுவிடுமாம். மேகத்தின் மேலே, காற்றின் இடைஞ்சல்கள் இன்றி சுதந்திரமாய் பறக்குமாம். அதைப் போன்றே கடலில் கொந்தளிப்புகள் உண்டாகும் வேளைகளில் கடல் வாழ் உயிரினங்கள், ஆழ்கடலுக்குள் சென்றுவிடுமாம். அங்கு பாதுகாப்பாக இருக்குமாம்.

இறை பக்தியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அல்லது ஆன்மீகத்தில் ஈடுபட்டு மேலே சென்றுவிட வேண்டும். அல்லது பற்றற்ற வாழ்க்கையை வாழ்ந்து ஆழமாக சென்றுவிட வேண்டும். இவைதான் கர்மாவை மாற்றும் வழிகள், வேறு வழிகள் கிடையாது. கடவுளைத் தவிர யாராலும் கர்மாவை மாற்ற இயலாது, முடியும் என்றாலும் கடவுள் அதை செய்யமாட்டார்.

அவர் அவர் விதைத்ததை அவர் அவர் அறுவடை செய்தே ஆகவேண்டும். மனிதர்களின் விதைப்பு மனதில் தான் தொடங்குகிறது. அதனால் மனதை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மனமில்லாதவர்களுக்கு கர்மகணக்கு கிடையாது
கர்மா மனதின் மூலமாகவும், சூட்சமமாகவும் செயல்படுகிறது. மனதைத் தெளிவு படுத்தி சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே, பழைய கர்மாக்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். மற்றபடி அனைவரும் செய்ததை அனுபவித்தே ஆகவேண்டும். பற்று அறுத்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு. கர்மா மனதிலிருந்து செயல்படுவதால், மனம் இல்லாதவர்களுக்கு கர்மா கிடையாது.

புத்தர் சொல்லும் கர்மா
புத்தர் சொல்கிறார், அவர் அவர் செய்த செயல்களின் பலன்கள் (கர்மபலன்கள்) காளைகள் பூட்டப்பட்ட மாட்டுவண்டியைப் போன்றது. மனிதர்கள் தான் காளைகள். அவர்கள் செய்த செயல்கள்தான் வண்டி. காளைகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் வண்டி சுயமாக பின் தொடரும் என்கிறார்.

கர்மாவில் இருந்து தப்பிக்க
வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா? மனதறிந்து யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதீர்கள். மனிதன், மிருகம், நீர்வாழ் உயிரினங்கள், பூச்சிகள், தாவரங்கள், இயற்கை, என யாருக்கு தீங்கு செய்தாலும், கண்டிப்பாக பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம், மாணாசெய் யாமை தலை.

எந்த சூழ்நிலையிலும், எந்த உயிருக்கும், உடலாலும் மனதாலும் ஒரு சிறிய தீங்கு கூட செய்யாமல் இருப்பது தான் சிறப்பான செயலாகும்.


கர்மாக்களின் விதங்கள்

நல்ல கர்மாக்கள் 
ஒருவர் செய்த செயல், அல்லது எண்ணிய எண்ணம் எதுவாக இருந்தாலும்,அந்த செயல் அல்லது எண்ணம் அந்த செயலை புரிந்தவருக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ ஏதாவது ஒரு வகையில் நன்மையானதாக இருந்தால் அது நல்ல கர்மா.

தீய கர்மாக்கள் 
தீய கர்மாக்கள் என்பவை உடலாலோ, மனதாலோ, எண்ணத்தாலோ தனக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, ஏதாவது ஒரு துன்பத்தை அல்லது தீமையை விளைவிப்பதாகும்.

பழைய கர்மாக்கள்  
பழைய கர்மாக்கள் என்பவை சிறுவயது முதலாக இன்று வரையில் உடலாலோ, மனதாலோ செய்த செயல்கள். ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பதனால் அவை சென்ற பிறவிகளில் செய்தவையாகவும் இருக்கலாம். எத்தனை பிறப்புகள் எடுத்தாலும் நாம் செய்த பாவ புண்ணியங்கள் நம்மை கண்டிப்பாக பின்தொடரும்.

மனதினால் உண்டாகும் கர்மாக்கள் 
மனதினால் உண்டாகும் கர்மாக்கள் என்பவை ஒரு மனிதன் அவனது மனதாலும், எண்ணங்களாலும் உருவாக்கும் கர்மாக்கள். ஒரு மனிதன் மற்ற மனிதர்களின் மீது மனதளவில் பொறாமை படும்போதும், கோபம், வெறுப்பு, பகைமை கொள்ளும் போதும் அங்கே ஒரு கர்ம கணக்கு உருவாகும். நேரடியாக எதுவும் செய்யாமல் இருந்தாலும் மனதளவில் ஒருவர் மற்ற மனிதர்களுக்கு செய்யும் அல்லது நினைக்கும் தீங்குகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் மீண்டும் அவரையே வந்தடையும்.

கர்மாக்களினால் சிலருக்கு நன்மைகள் உண்டாகலாம். சிலருக்கு துன்பங்கள் உண்டாகலாம். ஆனால் இவை இரண்டுமே நாம் விதைத்த விதைகள்தான். இவற்றுக்கு வேறுயாரும் காரணமில்லை, கடவுளும் காரணமில்லை. இதை மனதில் நிறுத்தி வாழ்க்கையில் உண்டாகும் இன்பங்களையும் துன்பங்களையும் மன ஓர்மையோடும், சம தன்மையோடும் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும், துன்பங்கள் நிச்சயமாக வராது. என் கஷ்டங்களுக்கு நான்தான் காரணம் என்று மனதார ஏற்றுக் கொண்டால் கஷ்டங்கள் வந்த தடம் தெரியாமல் மறைந்து போகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

கர்மா கணக்கு

பாவ கணக்குகள் உள்ள ஒருவர், நன்மைகளை செய்து அவரின் பாவங்களை கழித்துக்கொள்ள முடியாது. ஒருவர் பற்பல நல்ல காரியங்களில் ஈடுபட்டாலும் அவர் செய்யும் தீய காரியங்களுக்கும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். உதாரணத்துக்கு ஒருவர் 10 நல்ல காரியங்களை செய்து 10 புண்ணியங்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே நபர் 5 தீய செயல்களை செய்து 5 பாவங்களை சேர்த்துக் கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் 10 நன்மைகளை கொண்டு அவர் செய்த 5 பாவங்களை கழித்துக் கொண்டு மீதம் 5 புண்ணியங்கள் மிஞ்சாது.

அல்லது ஒரு நபர் 10 பாவங்களும் 10 புண்ணியங்களும் சேர்த்துக் கொண்டார் என்றால் இவை இரண்டையும் கழித்துக்  கொள்ள முடியாது. கர்மா கோட்பாட்டில் கணிதம் கிடையாது. ஏன் ஒரு செயலை செய்தோம்? என்ற செயலின் நோக்கத்தின் அடிப்படையில்தான் அதன் பலன்கள் அமையும்.

ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது, துரோகம் செய்வது, கொலை செய்வது, கற்பழிப்பது போன்ற கெட்ட செயல்கள் மட்டுமே தீய கர்மாக்கள் அல்ல. ஆனால் மனதாலே செய்யும் தீங்கும், நன்மையான செயல்களை செய்ய விடாமல் தடுப்பது, மற்றும் மற்றவர்களின் மனதை வேதனைப் படுத்தக்கூடிய அனைத்து செயல்களும் தீய கர்மாக்கள் தான்.

ஒரு நபர் 10 புண்ணியங்களும் 10 பாவங்களும் செய்திருக்கிறார் என்றால் அவர் 10 நல்ல மகிழ்ச்சியான அனுபவங்களையும், 10 துன்பகரமான அனுபவங்களையும் அனுபவிப்பார். ஒரு மனிதர் செய்திருக்கும் பாவம் புண்ணியங்கள் அனைத்தையும் தனி தனியாக அனுபவித்தே தீர்க்க வேண்டும். எந்த பாவ மன்னிப்பும், பரிகாரமும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

கர்மா என்பது பாவ புண்ணியங்களையும் தாண்டி, அன்றாட வாழ்வில் நாம் செய்யும் அனைத்து விசயங்களும் தான். உதாரணத்திற்கு நாம் உண்ணுவதும், பருகுவதும் கர்மாக்கள்தான். நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன அருந்துகிறோம் என்பதை வைத்து உடலிலும் மனதிலும் விளைவுகள் உருவாகுகின்றன அல்லவா? யோகா, தியானம், தொழுகை, வழிபாடுகள், பிரார்த்தனைகள் போன்றவையும் கர்மாக்கள்தான். அவை உடலிலும், மனதிலும், உடலின் சக்தியிலும் பல மாற்றங்களை உருவாக்குகின்றன அல்லவா?

பணம் சம்பாதிக்க ஒரு மனிதன் செய்யும் தொழிலும் வேலையும் கர்மா தான். அவர் செய்யும் தொழிலும் வேலையும் அவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்குகின்றன அல்லவா? மனிதர்களுக்கு இடையில் உள்ள உறவுகளும் கர்மாக்கள்தான். ஒவ்வொரு உறவும், நட்பும் ஒரு வகையான நன்மையையோ தீமையையோ அந்த மனிதனின் வாழ்க்கையில் உண்டாக்குகிறது அல்லவா? மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள், மீன்கள், தாவரங்கள், என அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களின் வாழ்க்கையில் சில மாறுதல்களை உண்டாக்குகின்றன. அவைகளுடனான உறவுகளும் கர்மாக்கள்தான். மனிதனின் சிந்தனையில் உண்டாகும் காமம், கோபம், எரிச்சல், பயம், ஆசை, பற்று, பொறாமை அனைத்துமே கர்மாக்கள் தான். அவை கண்டிப்பாக மனிதனின் உடலிலும், மனதிலும், சக்தி நிலையிலும் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மனிதன் தனது பஞ்சேந்திரியங்களாலும், மனதாலும் செய்யும் அனைத்து செயல்களும் கர்மாக்கள்தான். பார்ப்பது, கேட்பது, நுகர்வது, உணர்வது, சுவைப்பது, சிந்திப்பது இவை அனைத்துமே கர்மாக்கள்தான். அவற்றுக்கு நிச்சயமாக எதிர் விளைவுகள் உண்டாகும். அந்த விளைவுகள் நன்மையாக விளையுமா? தீமையாக விளையுமா? என்பது செயல்களின் நோக்கத்தை பொறுத்தே அமையும்.

கர்மா


கர்மா என்பது ஒரு சமஸ்கிருத சொல். அதன் மூலச்சொல் "கம்ம". இது புத்தர் பேசிய பாலி மொழி சொல். கர்மா என்றால் செயல் என்று அர்த்தம். ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும் செய்யும் செயல்களை கர்மா என்ற சொல் குறிக்கிறது. செய்த கர்மத்தினால் விளைந்த விளைவுகளை “ரிபக” என்று குறிப்பிடுவார்கள்.

ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும் செய்யும் ஒவ்வொரு செயலும், அந்த செயலுக்கேற்ற விளைவை அந்த மனிதனின் வாழ்க்கையில் உண்டாக்கும். நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும், தீய செயல்களுக்கு தீய பலன்களும் விளையும் என்பதே கர்மா கோட்பாடாகும்.

கர்மா கோட்பாட்டை நாம் தினமும் செய்யும் ஒரு செயலை வைத்துப் புரிந்துக் கொள்வோம். நாம் அனுதினமும் உணவை உட்கொள்கிறோம். உணவை உட்கொண்ட பிறகு அவற்றின் எச்சில்கள் நம் கையில் ஒட்டிக் கொள்ளும் அல்லவா?. உண்ட உணவுக்கு ஏற்ப சுவையும், சத்தும், கழிவும் உடலில் உருவாகும் அல்லவா?. உணவை உட்கொண்டது ஒரு செயல் (கர்மா). அதனால் உருவான சுவை, சத்து, எச்சில் மற்றும் கழிவுகள் செயலின் விளைவுகள் (ரிபக).

எந்த வகையான உணவை நீங்கள் உட்கொண்டீர்கள் என்பதை வைத்து நீங்கள் எந்த வகையான சுவையை அனுபவிப்பீர்கள்? எந்த வகையான சத்துக்கள் கிடைக்கும்? எவ்வளவு கழிவுகள் உருவாகும்? என்பவை மாறுபடும்.

மனிதனின் ஒவ்வொரு செயலும் எண்ணமும் ஒரு விதையைப் போன்றது. ஒருநாள் அது கண்டிப்பாக துளிர்விட்டு முளைத்து புல்லாகவோ, செடியாகவோ, மரமாகவோ வளர்ந்து நிற்கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஒவ்வொரு விதைக்கும் அது முளைக்கும் காலம் மாறுபடும். சில விதைகள் சில நாட்களில் முளைக்கும். சில விதைகள் சில வாரங்களில் முளைக்கும். சில விதைகள் சில மாதங்களில் முளைக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமானது, ஒவ்வொரு விதையும் கண்டிப்பாக முளைக்கும்.

அதைப் போலவே மனிதன் செய்த அல்லது செய்யும் செயல்களின் பலன்கள் அவனை வந்தடையும் கால அளவு மாறுபடலாம், ஆனால் வராமல் போகாது. அவன் அவன் செய்ததை அவன் அவன் அனுபவித்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும்.