ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
தன்முனைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்முனைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விரும்பியதை அடையும் வழிகள்


ஒரு விவசாயியின் நோக்கமென்ன? அவரின் தேவையென்ன?போதிய விளைச்சல், அவ்வளவுதானே? அவர் ஆசைப்பட்ட மாதிரியே நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவைகள் நிறைவேறுகின்றன. அந்த விளைச்சலுக்கு நேரடியாக அவர் எதையாவது செய்தாரா? அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா? எதுவுமே கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது.

அவ்வாறானால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவுமே செய்யவில்லையா? என்றால், எதுவுமே செய்யாமல் எவ்வாறு பலன் கிடைக்கும்? கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், நெல் மணிகளை தூவினார், தேவைப்படும் போதெல்லாம் நீர் விட்டார், இயற்கை உரமிட்டார், களையெடுத்தார், நெற்பயிர்கள் உருவாக சூழ்நிலைகளை மட்டும் சரியாக அமைத்துத் தந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு உரிய சன்மானம் கிடைத்தது. அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மனிதன் ஆசைப்படும் அனைத்தையும் இயற்கை வழங்கும். மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமுமில்லை. மனிதனுக்கு ஆசைப்படும் அதிகாரமுண்டு. ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரமில்லை.

மனிதன் எதை நோக்கி தன் உழைப்பை போடுகிறானோ, அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் இயற்கை உதவி செய்யும், அது கண்டிப்பாக கொடுக்கப்படும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும் கடவுளும் இயற்கையும் குறுக்கிட மாட்டார்கள். மனிதர்கள் தனக்கு தேவையானதைத் தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். உங்கள் ஆசைகள் நிறைவேற உங்களால் முடிந்த உழைப்பை மட்டும் வழங்குங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயமாக நிறைவேறும்.

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.


The Law of Attraction, ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது?.

ஈர்ப்பு விதி என்பது என்ன?
The Law of Attraction, ஈர்ப்பு விதி - என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தான் இப்போது பிரச்சனை. ஆளுக்கு ஒரு மாதிரியாக சொல்கிறார்கள். பெரும்பாலும் நினைத்தால் நடக்கும், ஆசைப்பட்டால் நடக்கும், கற்பனை செய்தால் கிடைக்கும், கனவு கண்டால் நடக்கும், என்பதுதான் பெரும்பாலோர் கூறும் ஈர்ப்பு விதியாக இருக்கிறது.

நினைப்பதும் ஆசைப்படுவதும் உண்மையில் நடக்கத் தொடங்கினால், இந்த உலகமே தலைகீழாக இருந்திருக்கும். இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் அரசனைப் போல் அல்லவா வாழ்ந்திருப்பான். செல்வசெழிப்பும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் வேண்டாத மனிதர்கள் உண்டா? அத்தனை மனிதர்களும் அரசர்களைப்போன்ற வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தால் மட்டுமே, ஆசைப்பட்டால், கற்பனை செய்தால் கிடைக்கும் என்பது உண்மையாக இருக்கும்.

நிஜ வாழ்க்கையில் முயற்சி செய்பவர்களும், உழைப்பவர்களும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவர்களும் மட்டுமே முன்னேறுகிறார்கள்.

பசியோடு உறங்கச் செல்லும் மனிதர்களின் அடிப்படை தேவையே உணவு மட்டும்தான்.ஆனால் அதை கூட அடைய முடியாமல் போகிறது. ஏழைகளின் கனவு பணம், பலருக்கு கனவாகவே போகிறது. இறுதிவரை வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி தேவை, ஆனால் அது பலருக்கு கிடைப்பதே இல்லை. அப்படியானால் ஈர்ப்பு விதி என்றால் என்ன? ஈர்ப்புவிதி என்பது உண்டா இல்லையா? ஒருவேளை இருந்தால் அது எவ்வாறு செயல்படுகிறது?.

ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது?
Law of Attraction? ஈர்ப்பு விதி என்பது எவ்வாறு செயல்படுகிறது என்றால், இயற்கையின் படைப்பில் மனிதர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதுதான் சட்டம். மனிதர்களுக்கு தேவைகள், ஆசைகள் உருவாகும்போது,அவற்றை அடைவதற்குரிய வழிகாட்டுதல்களும், வழிகளும், அறிவும் அவர்களுக்கு வழங்கப்படும். அவற்றை முறையே பயன்படுத்தினால், அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும்.

ஈர்ப்பு விதி என்பது மனிதன் ஆசைப்படுவதையோ, அவன் விரும்புவதையோ, அவன் கனவு காண்பதையோ, அவன் நம்புவதையோ கொடுப்பது அல்ல. ஒரு மனிதனுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதைக் கொடுப்பதுதான் ஈர்ப்பு விதி. ஆசைப்பட்டதை அடைய வேண்டுமென்றால், முதலில் அதை அடைய தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக அதற்குரிய உழைப்பை போடவேண்டும். இவற்றை செய்தால்தான் இயற்கை வழிகாட்டும், உதவியும் செய்யும்.

இயற்கை பேசுவதையும், இயற்கை காட்டும் அறிகுறிகளையும் சிறிது உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நம் வாழ்கையில், நம்மை சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினால், அனைத்தையும் நிச்சயம் அடையலாம்.

நீங்கள் ஆசைப்படும் அனைத்தும் நடக்க வேண்டுமா?
மிகச் சுலபம், உங்களுக்கு என்ன தேவை என்று முடிவுக்கு வாருங்கள். அது ஏன் உங்களுக்கு தேவை, அதனால் உங்களுக்கு என்ன பயன் என்று சிந்தித்துப்பாருங்கள்.

அதை அடைய தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குரிய உழைப்பை செலுத்துங்கள். இவற்றை செய்தால் உங்கள் தேவைகளும் ஆசைகளும் நிச்சயமாக நிறைவேறும்.